Skip to content
Home » தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

  • by Senthil

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும்   தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளன

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி  டி. ஒய். சந்தி்ரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள்  கொண்ட  அரசியல் சாசன அமர்வு இன்று  இந்த முக்கியமான வழக்கில் தீர்ப்பளித்தது.  5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
  கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்தி்ரங்கள் அனுமதிக்கப்படுகிறது என்பதை ஏற்க முடியாது.  தேர்தல் பத்திரம்  அரசியலமைப்பு சட்டத்திற்கு  புறம்பானது. கார்ப்பரேட்கள், தனி நபர்கள் மூலம் நிதி பெற இது வழிவகுக்கிறது.  கருப்பு கணத்தை ஒழிக்க இது வழி அல்ல. மாற்று வழிகளும் உள்ளன. நிதி அளிக்கும் நிறுவனங்கள் கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது.  இது சட்ட விரோதமானது.  தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.  வங்கிகள் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்.
நன்கொடை தருகிறவர்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டியதில்லை என்பது வாக்காளர்களின் உரிமையை   பறிப்பதாகும்.  அத்துடன்    இதுவரை தேர்தல் பத்திரம்  மூலம் நன்கொடை  பெற்ற  கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6ம் தேதிக்குள் ஸ்டேட் பேங்க் வழங்க வேண்டும்.அதை இணைய தளத்தில் மார்ச் 31ம் தேதிக்குள்  தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். கட்சிகள் பெற்ற நிதியை திருப்பி தர வேண்டும்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யார் நிதி வழங்கினார்களோ, அவர்கள் பெயரில்  நிதியை திருப்பி செலுத்த வேண்டும்.2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் பெயர் பட்டியல் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த  அதிரடி தீர்ப்பை எதிர்க்கட்சித்தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!