Skip to content

மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமுத்து (32). ஆசாரி வேலை செய்து வரும் இவர் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் நிலையில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மினிக்கியூர் பிரிவு சாலை அருகே சாலையை கடந்த போது எதிரே வந்த லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் அவருடைய இரண்டு கால்களும் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீரமுத்துவிற்க்கு திருமணமானது குறிப்பிடத்தக்கது. திருமணமான இரண்டாவது நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்போது பழைய தார் சாலை அகற்றப்பட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் சரியான முறையில் வாகனங்கள் செல்ல தேவையான எச்சரிக்கை பலகை வைத்து வாகனங்களை மாற்று பாதையில் செல்ல அனுமதித்தால், இது போன்ற விபத்துக்கள் நடப்பது குறையும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் வேலை செய்வதில் பெரும்பாலானோர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் சொல்லி புரிய வைப்பதில் பெரிய சிரமம் ஏற்ப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *