சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
வெற்றி துரைசாமி உடல் தனி விமான மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் நேற்று இரவு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி உருக்கமாக பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பணியில், அரசின் உயர் பதவிகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும் இங்கே வந்துள்ளார்கள். எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள். நான் மனவலிமையோடு சக மனிதனுக்காக வாழ்வேன்.
சமூகநீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு விடக்கூடாது என அரசால் அங்கீகரிக்கப்பட்ட 259 சாதி பிரிவுகளின் 170 சாதிகளில் உள்ளவர்கள் அரசு பணியில் உள்ளார்கள். மீதமுள்ள 89 பிரிவுகளில் உள்ளவர்கள் அரசு பணியில் சேர வைப்பதே எனது மகனின் மரணத்தில் நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி. அதனை நோக்கி நான் பயணம் செய்ய உள்ளேன். அதன் மூலம் என் மகனின் ஆத்மா சாந்தி அடையும்.
எனது மகனின் இறுதி ஊர்வலத்தில் ஆறுதல் கூற வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் வெற்றியாளர்கள் TNPSC வெற்றியாளர்கள் எனது மனமார்ந்த நன்றி. நான் இத்தனை மகன்களை பெற்றுள்ளேன். மன உறுதியோடு சேவையாற்றுவேன். என் மகனின் இறுதி நாளில் இவ்வளவு நேரம் காத்திருந்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி என்றும் சென்னை மேயரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனமாக சைதை துரைசாமி பேசினார்.