தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடிச்சம்பாடி பகுதியை சேர்ந்த வீரமணி(38) பைக்கில் காய்கறி வாங்க வந்துள்ளார். வீரமணி காய்கறி வாங்கிவிட்டு திரும்பி செல்லும் போது வினோத்குமார், வீரமணியிடம் வாகனத்திற்காக நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும் என்று ரசீதை கொடுத்துள்ளார். ஆனால் ரூ.5 தான் கொடுக்க முடியும் என்று வீரமணிவாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில் அருகில் கிடந்த மரக்கட்டையால் வினோத்குமாரை வீரமணி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த வினோத்குமார் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.