Skip to content
Home » கிளாம்பாக்கம் பிரச்சினை… பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் உறுதி..

கிளாம்பாக்கம் பிரச்சினை… பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் உறுதி..

  • by Senthil

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு  தீர்வு காணும் வகையில்  கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. தெற்கு,  வடக்கு மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், வார இறுதி நாட்களில் இங்கு போதிய பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்று மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து பிரச்சினைகளை கேட்டறிந்து அதை தீர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

இன்று பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பினார்.

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அங்கு பிரச்சினைகள் இருப்பதாக அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி  இருக்கும்போது அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது” என்று பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த சிறு சிறு பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுந்து பதில் அளித்தார். “சிறு சிறு பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. சிறு பிரச்சினைகள்  மட்டுமல்லாது பெரும் பிரச்சினைகளையும் சமாளித்து தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அவைதவிர இன்னும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும் சொல்லுங்கள்.  பிரச்சினைகள் இருந்தால்  கவனத்துக்கு கொண்டு வாருங்கள் தீர்வு காண்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!