நாகை அடுத்த நாகூர் தியாகராஜத்தெருவில் வசித்து வரும் சரவணபாண்டியன் அருகிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி இழங்கனி மன்னார்குடி உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் சரவணபாண்டியன் தனியாக வீட்டில் இரவு தூங்கியுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சரவணப்பாண்டியன் காரைக்கால் சென்ற நிலையில் அவருடைய கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக வீடு கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்மாகவே
கூரை வீடு முற்றிலும் எரிந்து முடிந்தது. தீ விபத்தில் டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அருகாமையிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாத வகையில் புகைமூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார், துணை வட்டாட்சியர் தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். நாகை அருகே அதிகாலையில் கூறைவீடு மின்கசிவு காரணமாக முழுவதும் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.