சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.
இதைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் கவர்னர் தெரிவித்த கருத்துகளால், தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
இந்த சூழலில், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவதுஉறுதியானது. பேரவை தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் மாளிகைக்கு சென்று, பேரவை கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. இதற்காக கவர்னர் ரவி காலை 9.45 மணிக்கு மாளிகையில் இருந்து புறப்பட்டார். 9.50 மணிக்கே முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முன்னதாக அமைச்சர்கள் அனைவரும் சபைக்கு வந்து விட்டனர். அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு வந்தார். 9.55 மணிக்கு கவர்னர் வந்தார். அவருக்கும் காவல்துறை வரவேற்பு அளித்தது. அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற செயலாளர் ஆகியோர் கவர்னரை வரவேற்று சபைக்குகள் அழைத்து வந்தனர். கவர்னர் அவைக்குள் வந்ததும் முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வரவேற்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். காந்தி குறித்து கவர்னரின் பேச்சை கண்டிக்கும் வகையில் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
அவர்னர் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும், சட்டமன்ற கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் கவர்னர் ரவி சட்டமன்றத்தில் அரசின் உரையை வாசிக்காமல், சொந்தமாக பேசத்தொடங்கினார். அப்போது மணி 9.59. கவர்னர் சில வார்த்தைகளை தமி்ழிலேயே பேசினார். மதிப்புக்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய முதல்வர் அவர்களே, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசிவிட்டு பின்னர் அவர் ஆங்கிலத்தில் பேசினார். அப்போதும் அவர் சொந்தமாக பேசத்தொடங்கினார். அரசின் உரையை படிக்க மறுத்து விட்டார்.வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெயஹிந்த் என அவர் பேசி முடித்தார்.
உரையில் உள்ள பல அம்சங்களை நான் ஏற்கவில்லை. இந்த உரையில் உள்ள கருத்துக்களுடன் நான் முரண் படுகிறேன். சட்டமன்றத்தில் தொடக்கத்திலும், இறுதி்யிலும் தேசிய கீதம் பாட வேண்டும் கோரிக்கை வைத்தேன். அதை அரசு ஏற்கவில்லை. என்று கூறிய அவர் .3 நிமிடத்தில் சொந்தமாக பேசி முடித்து அமர்ந்தார். கடந்த ஆண்டைப்போல அவர் வெளிநடப்பு செய்யவில்லை.
வழக்கமாக சட்டமன்றம் முடியும்போது தான் தேசிய கீதம் பாடப்படும். அந்த மரபு கூடாது என்ற தொனியில் அவர் கருத்து தெரிவித்தார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு ஆளுநர் படிக்க மறுத்த உரையை படித்தார். அதை திமுக உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். அதை கேட்டுக்கொண்டே சபாநாயகர் இருந்தார்.
சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியைதையொட்டி பேரவை அரங்கம் வண்ணம் பூசப்பட்டு,இருக்கைகள், மேஜைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.