வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் நேற்று முன்தினம் (வெள்ளி) மாலை முதலே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்து நிரம்பிவருவதால், முன்பதிவு செய்யாத பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல பயணிகளின் கூட்டம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், நள்ளிரவை நெருங்கும்போது நிலையமே பேருந்துகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேருந்துகளை சிறைபிடித்தும், சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அமர்ந்து விடியவிடிய சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் அதிகாரிகளின் உறுதிமொழியையடுத்து 2 மணி நேர மறியல் முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக பயணிகள் கூறும்போது, ‘‘திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம் என எந்த ஊருக்கும் பேருந்து சேவை இல்லை. நேரடியாக பேருந்து இல்லாவிட்டாலும் இணைப்பு பேருந்துகள்கூட இல்லை, முன்பதிவு முடிந்துவிட்டது என கூறுகின்றனர். உணவகத்திலும் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இங்கு கழிவறை தவிர்த்து எந்த வசதியும் இல்லை” என்றனர். இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்றும் தென் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.