மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வசிப்பவர் தனியார் நிறுவன ஊழியர் வினோத். நேற்று மாலை இவரது மூன்றரை வயது மகன் கழிவறைக்கு சென்ற போது சிறுவனின் கால் கழிவறை பீங்கானின் உள்ளே சிக்கிக் கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாததால் சிறுவன் கூச்சலிட்டுள்ளான். இதையடுத்து பெற்றொர் சிறுவனின் காலை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், முடியாமல் போனதை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மைலாப்பூர் தீயணைப்புத் துறையினர், சிறுவனின் காலை வெளியே எடுக்க முயற்சித்த போது கால் பீங்கானின் உள்ளே வசமாக சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பயத்தில் உறைந்து போன சிறுவனுக்கு ஆறுதல் கூறியபடியே அவனது கவனத்தை திசை மாற்றி பீங்கானை முழுமையாக உடைத்து காலுக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் பத்திரமாக மீட்டனர். தகவல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் காலை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.