அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வங்குடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக தை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அதன்படி நேற்று இரவு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பச்சைக்காளி, பவளக்காளி நடனம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட
மண்சோறு சாப்பிடும் நூதன வழிபாடு நடைபெற்றது. மண்சோறு சாப்பிடும் பெண்கள், குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம். தொடர்ந்து அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.