இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளில் முக்கிய பங்காற்றி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அந்த வகையில் உலக அரங்கில் மகத்தான ஆல் ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் தற்சமயத்தில் 3 வகையான இந்திய அணியிலும் இன்றியமையாத வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
கிரிக்கெட் உலகமே அவரை பாராட்டும் நி்லையில் ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங், மகன் ஜடேஜா குறித்து தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
திருமணம் நடந்த சில மாதங்களிலேயே ஜடேஜா தம்மை விட்டு பிரிந்து சென்றார். ஜடேஜாவின் மனைவி ரிவாபா அவரை ஏதோ மாயம் செய்து பிரித்து சென்று விட்டார். அதனால் தற்போது ஒரே நகரத்தில் இருந்தும் ரவீந்திர ஜடேஜாவை தாம் பார்ப்பதில்லை பேசுவதில்லை அவரும் தம்மை அழைப்பதில்லை .
மகனுடன் பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதை நினைத்து தனது மனம் வாடுகிறது. ரவீந்திர ஜடேஜாவை ஏன் கிரிக்கெட்டராக மிகவும் கடினப்பட்டு வளர்த்தோம் என்று தற்போது வருந்துகிறேன். திருமணம் நடந்த 3 மாதத்திலேயே ரிவாபா சொத்துக்களை பிரித்துக்கொண்டு தனியாக சென்று விட்டார். இந்த விஷயத்தில் தாம் பொய் சொன்னாலும் தம்முடைய குடும்பம் மற்றும் உறவினர்களை சேர்ந்த 50 பேரை கேட்டுப் பாருங்கள்.
அவை அனைத்தையும் விட தம்முடைய பேத்தியை 5 வருடங்கள் கடந்தும் நேரில் சென்று பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறி இருந்தார்.
மகன் மீது தந்தை இப்படி வேதனையான அடுக்கடுக்கான புகார்களை வைத்ததால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரவீந்திர ஜடேஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக எவ்வளவு உயரம் சென்றாலும் தாய் தந்தையை மறக்கக்கூடாது என்று ஜடேஜாவை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இதை அறிந்த ரவீந்திர ஜடேஜா தனது தந்தை கொடுத்த பேட்டி அனைத்தும் யாரோ எழுதிக் கொடுத்திருக்கலாம் என்பதால் அனைவரும் அதை நம்பாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக அரசியலில் இருக்கும் தம்முடைய மனைவியின் பெயரை கெடுப்பதற்காக யாரோ சிலர் வேண்டுமென்றே தம்முடைய தந்தையை இப்படி பேச வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு;- “எனது தந்தை கொடுத்த பேட்டி அனைத்தும் யாரோ எழுதிக் கொடுத்திருக்கலாம். பேட்டியில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அர்த்தமற்றது மற்றும் உண்மையற்றது. அது ஒரு தலைப்பட்ச கதையாகும். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன். என்னுடைய மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இது போன்ற முயற்சிகள் உண்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் பொருத்தமற்றது. இந்த விவகாரத்தில் நானும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அதை இப்படி வெளியில் பகிரங்கமாக சொல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.