திருச்சி, திருவெறும்பூரில் அரசு ஐடிஐ உள்ளது. இதன் வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் கீழ் மகளிர் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மகளிருக்கான தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன் , ரேடியோ பழுது நீக்கும் பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுகிறது.
இங்கு ரூ.11 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப் பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை பீகார் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாம் (66)என்ற தொழிலாளி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு தூண்களுக்கு இடையே போடப்பட்ட பெல்ட் எனப்படும் பீம் கான்கிரீட் எதிர்பாராத வகையில் சரிந்தது. அப்போது அந்த கான்கிரீட்டுக்கு கீழே வேலை செய்து கொண்டிருந்த இஸ்லாம் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இஸ்லாம் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.கட்டுமான பணிகள் தரமாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கட்டி முடித்த பின்னர் விபத்து ஏற்பட்டால் பெரிய விபரீதம் ஏற்பட்டு விடும் எனவே இப்போது ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.