நீலகிரி மாவட்டம் தீட்டுக்கல் பகுதியில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமான 34 ஏக்கர் வனத்தில் குத்தகை அடிப்படையில் 1955-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
உரிய அனுமதியின்றி நுழைய முடியாத இந்த வனத்திலிருந்து சுமார் 370 யூக்கலிப்டஸ் மற்றும் சீகை மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக ஆய்வு மையம் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதில், காண்டிராக்டர் அப்பாஸ் என்பவர், வனத்தில் கீழே விழுந்த மரங்கள் மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை வெட்டி எடுக்க வனத்துறையிடம் அனுமதி பெற்று நல்ல
மரங்களையும் வெட்டி கடத்தியதாக ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 3 மாதத்திற்கு பிறகு கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ரேஞ்சர் நவீன் குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இதனிடையே, இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் கண்ணனை டேராடூனுக்கும்,மணிவண்ணனை ஒடிசாவுக்கும். ராஜாவை அசாமுக்கும் பணியிட மாற்றம் செய்து மத்திய அரசின் மத்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மையத்தின் தலைமை
அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது. அத்தோடு, காண்டிராக்டர் அப்பாஸ் முன்ஜாமீன் பெற்று கைதில் இருந்து தப்பியுள்ளார். கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், வனத்துறையினர் என அனைவரும் கூட்டு சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொதுமக்கள், ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் உட்பட அதிகாரிகள் பணியிட மாறுதல் பெற்று தப்பிக்கவே காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.