Skip to content
Home » போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின் இனிப்பான பேச்சை மட்டும் நம்பி விக்னேஸ்வரன் அவரை காதலிக்க தொடங்கினார். 2 பேரும் செல்போனிலும், இணையதளம் வாயிலாகவும் காதலை வளர்த்து வந்தார்கள்.

பெரிய மீனை பிடிக்க தூண்டிலில் புழுவை போடுவது போல, அந்த இளம்பெண் வேறு ஒரு  அழகான இளம் பெண்ணின் புகைப்படத்தை போட்டு  விக்னேஸ்வரனை தனது  வலையில்  சிக்க வைத்தார். இந்த நிலையில் நேற்று பகலில் அந்த இளம்பெண் விக்னேஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். வீட்டில் நான் தனியாக இருக்கிறேன், நேரில் வந்தால்  ஜாலியாக இருக்கலாம் என  ஆசை காட்டினார்.

இதை உண்மை என்று நம்பிய விக்னேஸ்வரனும் இளம்பெண் சொன்ன எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார்.  கதவை தட்டியதும் ஒரு இளம்பெண் கதவை திறந்தார். அவர் போட்டோவில் பார்த்த பெண் இல்லையே என்ற எண்ணம் வட விக்னேஸ்வரனுக்கு வரவில்லை. அவர் ஏதோ ஒரு  இன்ப கனவில் மூழ்கியவறாக உள்ளே நுழைந்தார்.

அப்போது அதே வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் வந்து கதவை தாழ்போட்டனர். இதனால் விக்னேஸ்வரனுக்கு  பகீரென்று வியர்த்து கொட்டியது. அவர் சுதாாிப்பதற்குள் 2 பேரும் சேர்ந்து  விக்னேஸ்வரனுக்கு அடி உதை என சரமாரி விருந்து படைத்தனர். இதனால் அலறிப்போன அவர், உயிர்பிழைத்தால் போதும் என கெஞ்சினார்.

அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இருவரும் அஅவரது வங்கி கணக்கில் இருந்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.25 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவர் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி ஒன்றையும் பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.15 ஆயிரம் வேண்டும் என்று கேட்டனர். விக்னேஸ்வரன் வீட்டுக்கு சென்று அந்த பணத்தை ‘கூகுள் பே’ மூலம் அனுப்புவதாக சொன்னார். அதை நம்பி விக்னேஸ்வரனை விடுவித்தனர்.

ஆனால் அவர் நேரடியாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை கூறி புகார் கொடுத்தார். உடனடியாக போலீஸ் படையினர் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றனர். அங்கு இருந்த இளம்பெண்ணையும், அவருடன் இருந்த அவரது நண்பர்கள் ஏழுமலை மற்றும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் ஆகியோரையும் மடக்கி பிடித்தனர். 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விக்னேஸ்வரனிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் வெள்ளி சங்கிலி மீட்கப்பட்டது. இளம்பெண் உள்பட 3 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

அந்த இளம்பெண் இதேபோல் காதல் நாடகமாடி ஏராளமான இளைஞர்களை தனது  வலையில்  சிக்க வைத்து பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தார் என  போலீஸ் விசாரணையில்  தெரியவந்துள்ளது.   இதுபோல இளைஞர்கள் யாரும் பணத்தை பறிகொடுத்தால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!