மத்திய, மாநில அரசு பணிகளுக்கும், அரசின் திட்டங்களை பெறவும் , வங்கிகளில் கணக்கு தொடங்கவோ, கடன் பெறவோ ஆதாரமாக இருப்பது ஆதார் கார்டு. இந்திய பிரஜைகள் அனைவருக்கும் இந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. தனி மனித அடையாளமாகவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுகள் திருச்சி திருவெறும்பூர் அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு கிடக்கிறது. அதில் ஜெராக்ஸ் ஆதார் கார்டுகளும், ஒரிஜினல் ஆதார் கார்டுகளும் கிடக்கிறது.
திருவெறும்பூரில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பகுதியில் மர்ம நபர்கள் இதனை கொட்டி சென்றதாக தெரிகிறது.
ஒரு மூட்டையில் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆதார் கார்டுகளை சாலை ஓரம் வீசி சென்று உள்ளனர். இதில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் ஆதார் கார்டுகள் வங்கி கணக்கு ஐ எஃப் எஸ் கோடுடன் உள்ளது.
தகவல் அறிந்தவுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து வந்த எஸ்.ஐ. அங்கு கிடந்த சில ஆதார்கார்டில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கும் ஆவணம் கொடுக்கவில்லை என கூறினார்களாம்.
இதனால் அனைத்து ஆவணங்களையும் இரவோடு இரவாக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது போலீசார் விழிக்கிறார்கள். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை கொட்டியது யார், ஏன் கொட்டினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த பொதுமக்கள் இன்று காலை ஆதார் கிடந்த இடத்திற்கு வந்து தங்கள் பெயரில் கார்டுகள் கிடக்கிறதா என தேடிப்பார்த்தனர்.