நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 11-ந்தேதி சென்னையில் நடைபெறும் பாதயாத்திரையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார். இந்த யாத்திரை நிறைவு விழா வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த சூழ்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அவசர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பேரில் அண்ணாமலை இன்று காலை டில்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே இன்று டில்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் கே.பி. நட்டாவை முன்னிலையில் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஒருவரும் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். இந்த நிகழ்வுகள் முடிந்த பின்னர், அண்ணாமலை இன்று இரவே டில்லியில் இருந்து சென்னை திரும்புவதாக பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த நிலையில் பாஜவில் சேரப்போகும் அதிமுக பிரமுகர்கள், யார் யார்? என்பது குறித்தும் திமுக பிரபலம் யார் என்பது குறித்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தைசேர்ந்தவர்கள் என்றும் திமுக பிரமுகர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.. பாஜவின் இந்த மூவ் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..