சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3ஆவது நாளாக தொடர்கிறது. பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது. சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு சென்று மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணியில், இந்திய கடற்படையின் உதவி நாடப்பட்டுள்ளது. சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கடற்படை உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.