தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் புனித லூர்து மாதா ஆலய ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி இன்று காலை 6.50 மணிக்கு உறுதி மொழி ஏற்புடன் தொடங்கியது. கலெக்டர் தீபக் ஜேக்கப் உறுதிமொழியினை கூற, வீரர்கள் அதை திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர்.
ஏற்கனவே பதிவு செய்த வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தயார் நிலையில் இருந்தனர். அதுபோல காளைகளும் பரி்சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர்,
திருச்சி புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தது.
மொத்தம் 700 காளைகள் வந்திருந்தன. 350 வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக காளைகள் விடப்பட்டதும் சீறிப்பாய்ந்தன. அவற்றை சீருடை அணிந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர். அப்போது சில வீரர்கள் காயமுற்றனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், மிக்சி, குக்கர், அண்டா, கட்டில் என பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல்பரிசுபெறும் வீரருக்கும், காளையின் உரிமையாளருக்கும் மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் விதிமுறைப்படி நடைபெறுகிறதா என்பதை கோட்டாட்சியர் இலக்கியா ஆய்வு செய்தார். எஸ்.பி. ஆஷிஷ் ராவத் தலைமையில் கூடுதல் எஸ்.பி. முத்தமிழ் செல்வன், வல்லம் டிஎஸ்பி நித்யா ஆகியோர் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போட்டிகள் மாலை வரை நடைபெறும்.