இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஏற்கெனவே புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது புரோஸ்டேட் சிகிச்சை குறித்தும் மன்னர் சார்லஸ் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது அவருக்கு இன்னொரு வகை புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய சிகிச்சையின்போது தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகை புற்றுநோய் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் நேற்று முதல் அவர் வழக்கமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார் என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தங்கள் மன்னருக்கு புற்றுநோய் என்ற செய்தி இங்கிலாந்து மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.