திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டுகளை மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பொங்கல்
விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் புது முயற்சியாக தொலைநோக்கி வழியாக சூரியனை நேரடியாக கண்டு களித்து சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த விழாவிற்கு கல்லூரியில் தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் பொன் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த பொங்கல் விழாவில் மாணவ மாணவிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் உரியடி கயிறு இழுத்தல்,இசை நாற்காலி சாக்கு போட்டி,கோளமிடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கரகாட்டம் காவடியாட்டம், பொய்க்கால் குதிரை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.