மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும் ஐதீகம். இதனால் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபடுகின்றனர்.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தை மாத உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவித்து, ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தை மாத உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.