அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக (எழுத்தராக) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் இருந்த பாண்டியன் எறும்பு மருந்து தின்று விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து விட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சிகிச்சையில் இருந்த பாண்டியன் அதிக பணி சுமையால் தான் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தா.பழூர் காவல் நிலையத்துக்கு
சென்று அங்கு பணிபுரியும் அனைத்து காவலர்களிடமும் விசாரணை நடத்தினார். ஏட்டு பாண்டியனுக்கு துறை சார்ந்த நெருக்கடி தரப்பட்டதா அல்லது அவரது குடும்பம் சார்ந்து அவருக்கு ஏதேனும் மன உளைச்சல் இருந்ததா அல்லது வேறு யாராவது அவருக்கு மனரீதியாக நெருக்கடியை கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றார். இச்சம்பவம் அரியலூர் மாவட்ட காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.