வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருச்சி லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே என் நேரு, மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், முத்துராஜா, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மேயர் அன்பழகன் உள்பட ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பேசியதாவது.. திருச்சி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும். கடந்த தேர்தலின் போது திருச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் வாக்குவித்தியாசம் கிடைத்தது. எனவே திமுகவிற்கு இந்த முறை தொகுதியை ஒதுக்க வேண்டும். மேலும் தற்போதைய எம்பியான காங்கிரசை சேர்ந்த திருநாவுகரசர் பல இடங்களில் நன்றி சொல்லக்கூட வரவில்லை என திமுக நிர்வாகிகள் புகார் கூறினர். இதனை கேட்டுக்கொண்ட அமைச்சர் உதயநிதி திருச்சி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குவது குறித்து தலைவரிடம் தெரிவிப்பதாகவும் ஒவ்வொரு சட்டமன்ற நிர்வாகிகளும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.