சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவை வீழ்த்த எல்லா வேலைகளையும் செய்வேன் என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, மரியாதை செலுத்துவதற்காக நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்திருந்தனர். அப்போது சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டனர். இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாக பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி” என்றார். பின்னர் சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் எப்போதுமே மக்களை நம்பி இருப்பவர்கள். நிச்சயம் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. பன்னீர்செல்வம் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான். எங்கள் கட்சியினரை எதிரில் வரும்போது பார்த்து பேசினேன்.