யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் தொடங்கி, பாஜக வரை மத்தியில் ஆளும் கட்சிகள் இந்த கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்காமலும், மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் துரோகம் இழைத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மக்களுக்கான பல திட்டங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தராத புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும், புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை. மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கவில்லை. மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இட ஒதுக்கீடு வழங்காதது எனப் புதுச்சேரி மக்களுக்கு மத்திய பாஜக அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.