பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள சிறு கட்சிகள் மற்றும் சாதிய அமைப்புகளை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அதில் இணைய உள்ளது.
அத்துடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினர், டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகியவையும் பாஜக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாமக, தேமுதிக உள்பட இன்னும் சில கட்சிகளை இணைத்து 3வது அணியாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.
கூட்டணி குறித்த முறையான அறிவிப்பு வருவதற்கு முன்னரே நடிகர் சரத்குமார் பாஜக ஆட்சி மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை ஆஹா, ஓஹோ என பாராட்டி வருகிறார். இத்தகைய சூழலில்தான் மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளைக் கேட்டுப்பெற சரத்குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரத்குமார் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.
மேலும் அவர் தென்காசி தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இந்த செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் கன்னியாகுமரி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளை கேட்க சரத்குமார் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த தொகுதிகள் பாஜக கூட்டணியில் கிடைக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் பாஜகவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரியில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதாகிருஷ்ணனின் சொந்தத் தொகுதியாகும். 2014-ல் இங்கு வென்ற அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் அவர் களமிறங்க தயாராகி வருகிறார். இதனால் கன்னியாகுமரி தொகுதி என்பது சரத்குமார் கட்சிக்கு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் திருநெல்வேலி தொகுதியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தத் தொகுதியும் சமத்துவ மக்கள் கட்சிக்கு கிடைக்குமா என்பது இப்போது வரை கேள்விக்குறிதான். இதனால் சமத்துவ மக்கள் கட்சி விரும்பும் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.