கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், பவுத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் பூபதி(38) அவர்கள் திருச்செங்கோடு அருகே உள்ள கந்தபாளையம் காந்தி மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30.01.2024-அன்று அதிகாலை 12.30 – 01.00 மணியளவில் திருச்செங்கோடு சாலையில் தனது நன்பருடன் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் போது எதிர்பாராத நிலையில் தவறி விழுந்ததில் தலையில் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஈரோடு சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 01.02.2024-அன்று மாலை 4.30 மணியளவில் அன்னார் மூளைச்சாவு அடைந்து இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடல் உறுப்பு தானம் செய்ய அன்னாரது குடும்பத்தினர் மற்றும் அவர் மனைவி புவனேஸ்வரி(36) அவர்கள் முன் வந்தனர். அதன்படி, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் என 6 உறுப்புகள் உடல் உறுப்புதானமாக பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களுடைய தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றுஅறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில், உடல் உறுப்பு தானம் செய்த பூபதி அவர்களின் உடல் பவுத்திரம் மந்தை பகுதியல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் நேரடியாக சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்த பூபதி(38) அவர்களுக்கு மதன்ரியாஸ்(11) என்ற மகனும், நட்சித்திரா(8) என்ற மகளும் உள்ளார்கள்.