அயோத்திக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது. லக்னோ சென்று அங்கிருந்து அயோத்திக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவையை ஸ்பைஜெட் விமான நிறுவனம் நேற்று முதல் தொடங்கியது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி விமான நிலையம் சென்றடையும். அதேபோல அயோத்தியில் இருந்து மாலை 4 மணி கிளம்பி சென்னைக்கு 6.20க்கு விமானம் வந்து சேரும். சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான கட்டணம், வரிகள் உள்பட ரூ.6,499 என முடிவு செய்து கடந்த 13-ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டது. அயோத்திக்கு நேரடி
விமான சேவை தொடங்கியதும் ஏராளமானவர்கள் முன்பதிவு செய்ய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது. முதல் விமானத்தில் 163 பயணிகள் சென்றாலும் சில இருக்கைகள் இருந்தன. ஆனால் ரூ.27 ஆயிரம் வரை கட்டணமாக இருந்ததால் அயோத்தி செல்ல ஆசைப்பட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் முன்பதிவு தொடங்கி விட்டதால் குறைந்த கட்டணத்தில் இருந்த பெரும்பாலான இருக்கைகள் நிரம்பி விட்டன. தற்போது கூடுதல் கட்டண இருக்கைகள் தான் இருப்பதாக விமான நிறுவன அதிகாரிகள் கூறினர்.