கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் தமிழ்நாட்டில் இல்லாத அளவிற்கு அதிக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது இந்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் அனுமதி பெற்று பெறாமலும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் அஞ்சூர் பகுதியில் இரண்டு சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் மாவட்டத் துணை கலெக்டர் கருணாநிதி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு
வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கருத்து கேட்புக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர்கள் கல்குவாரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, குவாரி அமையக்கூடாது என்று பேச ஆரம்பித்த போது குவாரி ஆதரவாளர்கள் அனைவரும் எழுந்து சென்றனர் . அப்போது கருத்து கேட்பு கூட்டத்தில் 3 சமூக ஆர்வலர்களை தவிர அனைவரும் கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து எழுந்து
சென்றனர். பின்னர் குவாரிக்கு ஆதரவாக அவர்களின் ஆதரவாளர்கள் பேசும் பொழுது அனைவரும் அமர்ந்து இருந்தனர். க.பரமத்தி பகுதியில் பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு குவாரியின் மீது கூட நடவடிக்கை எடுக்காமல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.