தமிழக அரசின் வனத்துறையின் முயற்சியாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையினையும் ஏற்று சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் சர்வதேச சதுப்பு நிலங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலய பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் இதற்கு மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில், ராம்சார் சர்வதேச அங்கீகாரத்தின் மூலம் கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி கூடுதல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும். இதன் மூலம் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உருவாகும்.
மேலும் தமிழகத்தில் உள்ள ராம்சார் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களிலேயே 1100 ஏக்கரும் 11 சதுர கி.மீ பரப்பளவு என்ற கூடுதல் சிறப்பை கொண்ட ஒரே இடம் என்ற பெருமையையும் கரைவெட்டி பெறுகிறது .கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி என்பதில் கரைவெட்டி சுற்று வட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார்.
ஏரியைப் பாதுகாக்கவும் குடி நீர் கழிப்பறை பறவைகள் மாடம் சுற்றுலாப்பயணிகளுக்கு அமர்வதற்கு இருக்கைகள் டிஜிட்டல் தொலைதோக்கு கருவிகள் ,பறவைகளை பாதுகாக்க பழ வகை மரங்களை நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.