திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் ஆலீஸ் செல்வராணி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டத்திட்டக்குழு உறுப்பினரும் 3வது வார்டு திமுக கவுன்சிலருமான கோகிலா தலைமையில் , 7வது வார்டு ஜீவானந்தம், 8-வது வார்டு உதயகுமார், 9வது வார்டு ஆரோக்கியமேரி, 12வது வார்டு ரம்யா, 13வது வார்டு தியாகு ஆகிய 6 திமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுக்கு எந்த பணியும் ஒதுக்குவதில்லை.
பேரூராட்சித் தலைவர் ஆலீஸ் செல்வராணிக்கு ஆதரவான கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி பணகிள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனுமில்லை. பேருராட்சி நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதை கண்டித்து வௌிநடப்பு செய்கிறோம் எனக்கூறி வௌிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலகத்துக்கு வௌியே சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வௌிநடப்பு செய்த கவுன்சிலர்கள் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலரான ஆலீஸ் செல்வராணி, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். திமுக சார்பில் நிறுத்தப்பட்ட கோகிலாவை எதிர்த்து போட்டியிட்ட ஆலீஸ் செல்வராணி, பணத்தை செலவு செய்து தலைவரானார். அந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த வார்டு கவுன்சிலர்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அவர்கள் வார்டுகளுக்கு மட்டும் அதிக பணிகளை ஒதுக்குகிறார்.
எங்கள் வார்டுகளை புறக்கணிக்கிறார். மேலும் பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவர் ஆலீஸ் செல்வராணியின் கணவன் செல்வராஜ் தலையீடு அதிகமாக உள்ளது. எனவே பாரபட்சமாக செயல்படும் தலைவர், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வௌிநடப்பு செய்துள்ளோம் என்றனர். இதற்கிடையே , கூட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் காளியப்பனை தலைவர் ஆலீஸ் செல்வராணி சந்தித்து நேற்று மாலை புகார் அளித்தார்.