அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்ததாவது,
அரியலூர் மாவட்டமானது வளர்ந்து வரும் மாவட்டமாகும். அதனைக் கருத்தில்கொண்டு சுகாதாரத் துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவைப்படும் கூடுதலான கட்டிடங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கருத்துருக்கள் அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், நம்முடைய மாவட்டத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 300 நபர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அதனைக் கருத்தில்கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும், சுகாதார துறைக்கும் அதிக ஓதுக்கீடு ஏற்படுத்தி தருமாறு அரசு உறுதி மொழிக்குழு ஆய்வின் போதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற காலங்களில் படிப்படியாக நிதியினைப் பெற்று சுகாதாரத்துறையின் தேவைகள் நிறைவேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அஜித்தா, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், துணை இயக்குநர் (குடும்பநலம்) ராஜா, துணை இயக்குநர் (காசநோய்) நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.