அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மனிதநேய வார விழாவையொட்டி மாணவர்களிடையே நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கெலக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பரிசுகளை வழங்கினார்கள்.
மனித நேயம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசால் ஆண்டு தோறும் ஜனவரி 24 முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை மனித நேய வார விழா ஆதி திராவிடர் நலத் துறை மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், மற்றவர்களையும் மதித்து நடத்தல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல். சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைதல்தான் மனித நேயமாகும். எந்த மனிதனிடத்தில் மனித நேயம் அதிகமாக உள்ளதோ அவன் சமூகத்தில் உயர்ந்து நிற்கிறான். அதுபோன்ற மனிதர்கள் அதிகமாக உள்ள நாடும் எல்லா வகையிலும் மேலோங்கி நிற்கிறது.
மனித நேயம் குறித்து வருங்கால தலைமுறையினர் அதிகம் அறிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் மனிதநேயம் குறைந்து வருகின்ற சூழல்தான் நிலவி வருகிறது. உலகத்தில் சுயநலமாக வளர்கிற நிலைதான் காணப்படுகிறது. குழந்தைகள் வளரும்போதே மனித நேயத்தினை புகட்டி வளர்ப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியரது கடமையாகும். மனித நேயம் என்றால் என்ன என்பது குறித்து அவர்களிடம் சொல்லவேண்டும். சக மனிதனிடம் அன்புக்காட்டுவது, அவர்களுக்கு மரியாதை கொடுப்பதுதான் மனித நேயம். இதனை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ளவேண்டும். மனிதநேயம் வளரும் போதுதான் ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஜாதி, மதம், இனம், பாலின வேறுபாடின்றி அனைவரும் சமம் என்ற எண்ணம் வளர வேண்டும்.
பெரியோர்களை மதிக்கவேண்டும். சிறு குழந்தைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். நமது நாட்டில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா ஆகியோர் மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். அன்னைதெரசா அவர்கள் கடல் கடந்து வந்து நமது நாட்டில் கல்கத்தா நகரில் சமூக சேவை
செய்தார்கள். அதனை மிகுந்த தியாகத்தோடு செய்தார்கள். அதற்கு காரணம் அவர்களிடமிருந்த மனிதநேயமாகும். மக்களிடையே அன்பு குறைந்து வருவதன் காரணமாகவே இன்று பல்வேறு இடங்களில் போர் குறித்த அறிகுறிகள் காணப்படுகிறது. அதனால் மனிதநேயத்தினை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குறிப்பாக ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவது, மதிப்பது உள்ளிட்டவற்றை சொல்லிக் கொடுத்தால் தான் நாளைய தலைமுறை ஆரோக்கியமான அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இவ்விழாவில், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நல அலுவலர் விஜயபாஸ்கர், மாவட்ட மேலாளர், தாட்கோ பரிமளா, விளந்தை ஊராட்சி மன்றத்தலைவர் இரா.நடராஜன், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) அருள்செல்வி (அரியலூர்), ஆனந்தன் (உடையார்பாளையம்), தலைமையாசிரியர்கள் பவானி, மதிஒளி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.