தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பஸ் ஸ்டாண்டிற்கு அமராவதி சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே திடீரென வந்த அவரது கணவர் குணாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து அமராவதி வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த குணா, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் அமராவதி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதையடுத்து, குணா உட்பட மூவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம், அமராவதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.