கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம்.
ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கேரள பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார். வழக்கறிஞரும் கூட. இந்நிலையில் கடந்த 2021, டிசம்பர் 19 ஆம் தேதியன்று ஆலப்புழாவின் வெல்லக்கிணறு பகுதியில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது தாய், மனைவி, மகள் கண் முன்னே இந்தக் கொலை நடந்தது.
முன்னதாக ரஞ்சித் கொலை தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில் அந்தக் கொலை சம்பவமானது, எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் கொலைக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவந்தது. ஷான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார். 2021 பிப்ரவரியில் ஆலப்புழாவில் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் நந்துகிருஷ்ணா கொலைக்கு பழிவாங்க ஷான் கொல்லப்பட்டார். ஷான் கொலைக்கு பதிலடியாக ஸ்ரீனிவாசன் ரஞ்சித் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.