பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது, கிராம அதிகாரி கைது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி என்ற செய்திகளை நாம் அன்றாடம் செய்திதாள்களில் படிக்கிறோம். ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி மக்களுடன் முதல்வர் என்ற முகாமை நடத்தி மக்களின் கோரிக்கைகளுக்கு ஒருமாதத்தில் தீர்வு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாவட்டங்களில் நடந்த முகாம்களில் பல லட்சம் மக்கள் மனுக்கள் கொடுத்தனர். அதில் எத்தனை பேருக்கு தீர்வு கிடைத்தது என்பது தான் கேள்விக்குறி…
மக்கள் பிரச்னைகளை தீர்க்க முதல்வர் ஸ்டாலின் எத்தனை தீவிர நடவடிக்கைகள் எடுத்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் அதனை உணர்ந்து செயல்படுவது இல்லை, என்கின்றனர் பொதுமக்கள். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நடந்து கொண்டிருக்கிறது … ஒரு நிஜக்கதை.. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் எஸ். சுவாமி தாஸ். இவர் பிரபல மாலை நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி எஸ். பாலா என்பவர், பெயரில் முசிறி பரிசல்துறை ரோட்டில் உள்ள வீட்டுக்கு பட்டா கேட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முசிறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ் என்பவரிடம் மனு அளித்தார். அன்றைய தினம் சுவாமிதாசும், பாலாவும் நேரில் சென்று மனு அளித்திருந்தனர். ஆனால் இன்றைய தேதி வரை பட்டா வழங்கப்படவில்லை. சுமார் 6 மாதம் ஆகியும் பட்டா கேட்டு பல முறை தாசில்தாரை நேரில் சந்தித்து பலன் இல்லை. ஒவ்வொரு முறையும் நடவடிக்கை எடுக்கிறேன் என்கிற பதில் மட்டுமே தாசில்தார் தரப்பில் அளிக்கப்பட்டிருக்கிறது. பொங்கலுக்கு முன் ஒரு நாள் போய் கேட்டபோது ஒரு
பெண் அதிகாரியை சுட்டிக்காட்டி அவரிடம் தான் உங்கள் பைல் உள்ளது. அவரை போய் பாருங்கள் என கூறியுிருக்கிறார் தாசில்தார். அந்த பெண் அதிகாரியிடம் பல முறை கேட்கும் போதெல்லாம் பார்க்கிறேன் என பதில் கூறியிருக்கிறார். பத்திரிககையாளர் சாமிதாஸ் நேற்று போய் அந்த பெண் அதிகாரியிடம் கேட்டபோது உங்கள் பைல் என்னிடம் இல்லை. எங்கே இருக்கிறது என நீங்கள் தேடிப்பாருங்கள் என பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தாலுகா அலுவலகங்களில் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை மனுக்கள் எத்தனை கிடப்பில் கிடக்கிறது என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரிப்பதில்லையா? ஏன் இப்படி 6 மாதமாக தாசில்தார் அந்த விண்ணப்பத்தை கண்டுகொள்ளவில்லை?
தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பும் கோப்புகளுக்கு கிடப்பில் போடாமல் கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைக்கிறது. ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் எத்தனை நாள் தூங்க வேண்டும்? என கணக்கு உள்ளதா? இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கை. அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் மனுக்கள் எத்தனை நாளாக இருக்கிறது. எத்தனை நாளில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.