கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோருவது குறித்து அவர் கொடுத்த மனுவில் தெரிவித்ததாவது…
கரூர் மாவட்ட கிரஷர் உற்பத்தியாளர்களின் தொடர் விலையேற்ற அறிவிப்பால் எங்கள் சங்கத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2020-ம் வருடத்திலிருந்து கொரோனா தொற்று பரவல் முதல் உலகளாவிய போர் சூழல் வரை பல காரணிகளால் உண்டான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதை தொடர்ந்த விலையேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்களில் கட்டுமான தொழிலும் ஒன்று என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதனால் கடந்த மூன்று வருடங்களில், பெரும்பாலான சிறு குறு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிலை விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இன்னும் பல பொறியாளர்கள் பெயரளவில்மட்டுமே தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், கரூர் மாவட்ட கிரஷர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் பல்வேறு முறை தொடர்ச்சியாக நியாயமற்ற முறையில் தன்னிச்சையாக விலையேற்றத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் M-Sand, P-Sand, ஜல்லி ஆகியவற்றின் விலையை 60% முதல் 90% வரை உயர்த்தியிருக்கிறார்கள். இந்த விலையேற்றம் எங்களை கடுமையான அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாக்கியிருக்கிறது. மேலும், கிரஷர் பொருட்களின் விலையேற்றத்தால் அது சார்ந்த இதர கட்டுமான பொருட்களின் விலையும் உயர்த்தப்படுமோ என்ற அச்சத்திற்கும் ஆளாகியிருக்கிறோம்
இதனால், கட்டிட வேலைகள் குறைந்து கட்டுமான தொழில் நசிவடைந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம்.எனவே, பொதுமக்களையும், கட்டுமான பொறியாளர்களையும், கட்டுமான தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த கிரஷர் பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.