பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார பணிகுழு, விளம்பர பணி குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுக்களில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு கடந்த வாரம் ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து, அதிமுக பிரசாரக் குழு, விளம்பரக் குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதிமுக அமைக்கப்போவதாக கூறும் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராத நிலையில் அந்த கட்சியும் தொகுதி பங்கீடுகுழு கூட்டத்தை நடத்தி உள்ளது. திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டு காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் வருமா அப்படி வந்தால் அவர்களை நாம் விட்டு விடக்கூடாது என்பது குறித்து முதல்கட்டமாக அதிமுகவினர் ஆலோசித்ததாக தெரிகிறது.