சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறி பேச தொடங்கினார். அந்த நேரத்தில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த குறிப்பிட்ட நிகழ்வையும் குறிப்பிடாமல் அரசை குற்றம்சாட்டக்கூடாது என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி:- என்னை பேச விட்டால் தானே பேச முடியும். சபாநாயகர்: நீங்கள் பேசுங்கள், ஆனால் எடுத்த எடுப்பிலே ஆதாரம் இல்லாமல் பேசலாமா?. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அவரை பேச விடுங்கள், அதற்கு நானும் பதில் சொல்ல தயாராக தான் இருக்கிறேன். அவர்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை நானும் சொல்கிறேன். அவை நடவடிக்கைக்கு அவரது பேச்சு உகந்ததாக இல்லை என்றால் நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சென்னையில் பெண் போலீசார் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சீண்டல் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். சபாநாயகர்:- இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. கோர்ட்டில் இருக்கும் வழக்கை பற்றி அவையில் விவாதிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி:- எனக்கு பேச வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். பேசினாலும் பதிவு செய்ய மாட்டீர்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. அதேநேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், அய்யப்பன் ஆகியோர் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தனர். சபாநாயகர்:- ஆதாரத்தின் அடிப்படையில் பேசினால் பதிவாகும். பொதுவாக நேரமில்லா நேரத்தில் இது போன்ற விஷயங்களை பேசும்போது அரசின் கவனத்தை ஈர்த்து தான் பேச வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நேரமில்லா நேரத்தில் என்ன பேச போகிறோம் என்பதை உங்களிடம் (சபாநாயகர்) அவர்கள் தெரிவித்து, அனுமதி பெற்று தான் பேச வேண்டும், அவர்கள் அனுமதி பெற்றார்களா?. சபாநாயகர்:- காலையில் என்னிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வந்து நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்சினை குறித்து பேச இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் எதைப்பற்றி என்பதை சொல்லவில்லை. எனவே எதிர்க்கட்சி தலைவர் நீங்கள் முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அவை நடவடிக்கை தெரியும். இருந்தாலும், கோர்ட்டில் உள்ள விஷயத்தை பேசலாமா? எடப்பாடி பழனிசாமி:- முதல்-அமைச்சருக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள். எனக்கு தர மறுக்கிறீர்களே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சி தலைவர் இப்படி பேசுவது மரபு அல்ல. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அப்போதைய சபாநாயகர் தனபாலிடம் அனுமதி பெற்று தான் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி:- தமிழகத்தில் போதை பொருள்…சபாநாயகர்:- இது நேரமில்லா நேரம். அடுத்த நிகழ்வுக்கு போக வேண்டும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உங்கள் உறுப்பினர் பேச இருக்கிறார். எனவே அமருங்கள். எடப்பாடி பழனிசாமி:- எங்களை பேச அனுமதிக்க மாட்டீர்களா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அவர்கள் பேசட்டும், அனுமதி கொடுங்கள். குற்றச்சாட்டுகளை சொன்னால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம். சபாநாயகர்:- ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்லாமல் பேசுங்கள். தொடர்ந்து, பேச தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, தாங்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் நிலவிய சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும். அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும்’ என்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த நேரத்திலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த சட்டம்-ஒழுங்கு குறித்து பேசியபோதும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவையிலே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.