கடந்த 2020-ம் ஆண்டு பிகாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிகாரில் புதிய ஆட்சியை அமைத்தார். வரும் மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற நிதிஷ் குமார் விரும்பினார். இந்நிலையில், பிகாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவர் பிகாரில் மக்கள் தலைவர் என அனைத்து தரப்பு மக்களாலும் அழைக்கப்பட்டவர். பாஜகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் இருப்பதால், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதுதான் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தினர். இதனால் பாஜக ஆதரவுடன், பிகாரில் புதிய ஆட்சியை அமைக்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். தனது அமைச்சரவையில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்களை மாற்றிவிட்டு பாஜக எம்எல்ஏக்களை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பிகாரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்கள் பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பிகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி, ‘‘அரசியலில் எந்த கதவும் மூடப்படுவதில்லை. தேவைப்பட்டால் திறக்கப்படும்’’ என்றார். இந்த நிலையில் இன்று காலை பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன்” என தெரிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..