நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், மாநகராட்சி பள்ளி மாணவ – மாணவிகளின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. முதலில் சொத்து வரி முறையாக செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் மேயர் பிரியா ராஜன். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. அப்போது, மேயர் பிரியா சான்றிதழ் வாங்க வந்தவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தனக்கு அருகே நின்றுகொண்டிருந்த மகேஷ் குமார் என்பவரிடம் பேசிக்கொண்டே அலட்சியமாக சான்றிதழ் வழங்கினார் மேயர் பிரியா. இது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.