சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் உள்ளார். சிறுசன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள மான்போர்டு தனியார் பள்ளியில் 5 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர், மாணவன் மனிஷ் மித்ரன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், மித்ரனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட குகன்யா பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிகிச்சையில் இருந்த மகன் மனிஷ் மித்ரனின் இடது காது துண்டாகி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவரிடம், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு காதை ஓட்ட வைக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தனது மகனை அந்த ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த அவர், தண்டையார்பேட்டையில் உள்ள அப்போல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அன்று இரவே மனிஷ் மித்ரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் காது ஒட்டப்பட்டது. இதையடுத்து, மகனிடம் விசாரித்த பெற்றோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
மித்ரன் பள்ளியில் விளையாடும் போது அடிபடவில்லை என்றும், வகுப்பு ஆசிரியை நாயகி என்பவர், மித்ரன் வகுப்பறையில் தமிழில் பேசியதன் காரணமாக கண்டித்ததும். அப்போது, ஆசிரியை மித்ரனின் காதை திருகிய போது, அவரது நகம் பட்டு இந்த காயம் ஏற்பட்டதும் தெரிய வந்ததுள்ளது.