கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ஆர். பாலமுருகன் ( 51). இவர் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் கற்பகம் ஆபரண மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இவரது தந்தை ராமதாஸ் கொரனா பாதிக்கப்பட்டு இறந்தார். பிறகு 16 நாட்கள் ஈமக் காரியம் செய்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் கடையை திறக்கவில்லை. இந்தநிலையில் கடையின் வாடிக்கையாளர் தாலி செயின் அவசரமாக தேவைப்பட்டதால் பாலமுருகனை தொடர்பு கொண்டார்கள். அப்போது பாலமுருகன் தனது தங்கையின் கணவர் சிவக்குமாரை அழைத்து வாடிக்கையாளருக்கு அவசரமாக தாலிக்கொடி தேவைப்படுவதால் கடையின் சாவியை கொடுத்து தாலிக் கொடியை மட்டும் எடுத்துக் கொடுக்குமாறு கூறி இருக்கிறார்.
பாலமுருகனின் தங்கை கணவர் சிவக்குமார் கடையை திறந்து தாலி கொடி கொடுத்து விட்டு, பிறகு கடையில் இருந்த ஏராளமான நகைகள், பாலமுருகன் தந்தையின் பெயரில் உள்ள முதலீட்டு பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டார். மேலும் கடை ஊழியர் சதீஷ், பாலமுருகனின் உறவினர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் சிவக்குமாரிடம் பொருட்களை எல்லாம் எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு சிவக்குமார் நான் தர்மபுரியில் வசிக்கிறேன் என்னிடம் பல ரவுடிகள் உள்ளார்கள், இதை நீங்கள் பாலமுருகனிடம் தெரிவித்தால் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவேன், மேலும் என்னை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று மிரட்டினார்.
இதனால் பயந்துபோன சதீஷ் மற்றும் உறவினர் ஜெய்சங்கர் பாலமுருகனிடம் இதனை தெரிவிக்கவில்லை. பிறகு கடை ஊழியரை மிரட்டியது போல் பாலமுருகனையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டினார்.
இந்நிலையில் கடை ஊழியரும், ஜெய்சங்கரும் ஏற்கனவே கடையில் நடந்த அனைத்து சம்பவத்தையும் பாலமுருகன் இடம் கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் தனது தங்கை கணவர் சிவக்குமார் மீது புகார் கொடுக்க தயாரானபோது, கடை ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் சிவக்குமாரை பகைத்து கொள்ள வேண்டாம் என கூறியதால் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.
தொடர்ந்து பாலமுருகனுக்கு மிரட்டல் வந்துள்ளது .இதை தொடர்ந்து பாலமுருகன் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாலமுருகனின் தங்கை கணவர் சிவகுமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.