அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், மணகெதி கிராமத்தில் “குடியரசு தினவிழாவையொட்டி” இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், மணகெதி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்). ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் விவாதிக்கப்பட்டது.
இக்கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசியதாவது,
இக்கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். அதேபோன்று வீடு இல்லாதவர்களுக்கு புது சர்வே எடுக்கப்படும் போது அவை கருத்தில்கொள்ளப்படும். மேலும் தண்ணீர் வசதிகளுக்கு உரிய ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது விரைவில் அதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். கிராம சபைக் கூட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இக்கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். நம் நாட்டின் அமைப்புகள் கிராமத்திலிருந்தே தொடங்குகிறது. உங்களுடைய ஊராட்சிகளுக்கான தேவைகளை கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்களாக இயற்றி அரசு ஒதுக்கீடு செய்யக்கூடிய நிதிகளைக் கொண்டு ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம்.
கிராம சபைகளின் முறையாக பயன்படுத்திக்கொண்டால் அந்த ஊராட்சிகள் ஆரோக்கியமாக செயல்படும். அந்த வகையில் கிராம சபைக் கூட்டங்களில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கும் போதுதான் அந்த ஊராட்சியின் தேவைகள் நிறைவேறும். திட்டங்கள் நிறைவேறுவதற்கு கிராம மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோன்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகமல் பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தொடர்ந்து தூய்மையாக பராமரித்திட வேண்டும். மேலும் அங்கன்வாடி மையங்களில் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகள் மற்றும் ஆரம்பக் கல்வி குறித்த கதைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் குழந்தைகளை முறையாக அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதுடன், அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரணி, வேளாண்மை இணை இயக்குநர் பாலையா, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழ்செல்வன், மணகெதி ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.