75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர்.
புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் மெர்சி ரம்யா தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னடை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கி, நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
திருமயம் ஒன்றியம் மேலப்பனையூர் பஞ்சாயத்து தலைவர் மேகநாதனிடம் தூய்மை பாரத இயக்க முன்மாரிய கிராமத்திற்கான விருதினையும் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் எஸ்.பி. வந்திதா பாண்டே, கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தேசிய கொடியேற்றினார். விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தேசியக் கொடியேற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 56 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் 24 பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 129 பயனாளிகளுக்கு ரூ.3.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்
குடியரசு தினவிழாவை ஒட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி (நீலகிரி), மாரியம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நல சங்கமாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியில் டிஐஜி ஜியாவுல் ஹக் , எஸ்.பி., ஆஷிஷ் ராவத்,கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன் தேசியக் கொடியேற்றினார். ஆணையர் மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.