இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருவரும் அதிரடியில் இறங்கி பவுண்டரிகளை விரட்டினர். வேகப்பந்துவீச்சு எடுபடாததால், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுழல் பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்துவீசி எதிரணியை மிரட்டினர்.
இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. ஜாக் கிராலி(20), பென் டக்கெட்(35), ஜோ ரூட்(29), பேர்ஸ்டோவ்(39), ஆகியோர் சிறந்த தொடக்கம் கிடைத்தும் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்தனர். ஒல்லி போப்(1), பென் பேக்ஸ்(4) இருவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். அடுத்ததாக ரெகான் அகமது 13 ரன்னிலும், டாம் ஹார்ட்லி 23 ரன்னிலும் வெளியேறினர். 64.3 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களே எடுத்திருந்தது. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்(23), ஜெய்ஸ்வால் (46) ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.