அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்களவை தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, மின்னணு வாக்குப்பதிவு செயல்முறை விளக்க குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மேலும் மகளிர் திட்ட சுய உதவிக்குழுவினர் வரைந்த விழிப்புணர்வு கோலங்களையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் வாக்காளர் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்ததாவது,
வாக்காளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்டுத்தும் வகையில் பேரணி, விளம்பர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் நோக்கம் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். சுமார் 140 மக்கள்தொகை கொண்ட நாடாகும். இதில் நாம் பங்காற்றுவதை பெருமையாக கருதவேண்டும். நமக்கான தலைவர்களை நாமே தேர்வு செய்யும் உரிமையை நமது ஜனநாயகம் நமக்கு வழங்குகிறது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்
கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாக்களிப்பது முக்கியமானதாகும். அதேபோன்று 18 வயது நிரம்பிய அனைவரும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளைய வருங்கால தலைவர்களை தேர்வு செய்வதில் இளம் வாக்காளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். 100 சதவீதம் வாக்களிப்பதை நாம் உறுதி செய்திட வேண்டும். ஜனநாயகத்தை கொண்டாடுவதுதான் தேர்தல்களாகும். நம்நாட்டில் தேர்தல்கள் மிகவும் வெளிப்படையாவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. எந்த வித தூண்டுதலுமின்றி நாம்
நினைத்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகைள் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் சரியாக பயன்படுத்திட வேண்டும் மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பேசினார்.
பின்னர், தேசிய வாக்களார் தினம் மற்றும் வாக்களார் விழிப்புணர்வு தொடர்பாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைபெற்ற ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பாக வாக்காளர்கள் சேர்ப்பு பணியில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
பின்னர், பள்ளி, மாணவ, மாணவியர்களின் வாக்காளர் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளான உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், அரசு நகர் பள்ளியின் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜெயா, அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உட்பட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.