நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது. அதில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நேற்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை இந்த குழுவினர் அழைத்து கருத்து கேட்டனர். தற்போதைய கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக்கட்சியினரின் பலம், திமுகவில் சரி செய்ய வேண்டிய பிரச்னைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தனர். பிரச்னைக்குரிய பகுதிகளில் நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன.
சிலவற்றில் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும், சிலவற்றில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை இருக்கும் எனவும் ஒருங்கிணைப்புக்குழு உறுதியளித்துள்ளது.
தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர் தொடங்கி, ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவினர் எச்சரித்துள்ளனர். இறுதியாக இத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும், இத்தேர்தலில் வெற்றி என்பது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி உரையாற்றியுள்ளார்.