நடிகர் விஜய், தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன் பொதுச்செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இந்த இயக்கத்தின் சார்பில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அடுத்த பனையூரில் இன்று மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் உள்பட 150 பேர் பங்கேற்றனர். இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்று அரசியல் கட்சியை விரைவில் தொடங்குவது பற்றி அறிவித்து உள்ளார். ஒரு மாதத்திற்குள் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக கட்சியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதை இன்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்தார். கட்சி தொடங்குவது குறித்தும் அவர் நிர்வாகிகளிடம் பேசினார். அதற்கு அச்சாரமாக பூத் கமிட்டிகளை பலப்படுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தான் விஜய் களம் இறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த தேர்தலிலேயே களம் காண அவர் தயாராக இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சி பெயர் அறிவிப்புடன் விஜய் அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.