ஜப்பானின் ‘நிர்வாண ஆண்’ திருவிழா 1650 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது. அடுத்த மாதம் 22 ம் தேதி இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது. ஹடக்கா மட்சுரி என அழைக்கப்படும் இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் ஆண்கள் குறைந்தபட்ச ஆடையை மட்டுமே அணிவர். வெறும் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் இந்த பழமையான திருவிழாவில், இந்த ஆண்டு 40 பெண்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விழாவின் குறிப்பிட்ட சடங்கில் மட்டும் இந்தப் பெண்கள் பங்கு பெறுவார்கள். பங்குபெறும் பெண்கள் ஜப்பானின் பாரம்பரிய உடை அணிந்திருப்பார்கள். அவர்கள் துணியால் மூடப்பட்ட மூங்கில் புல்களை சன்னிதானத்திற்குள் எடுத்துச் செல்வார்கள். கடந்த ஆண்டுகளில் எழுந்த மிக அதிகமான வேண்டுகோள்களால், இந்தப் பாரம்பரிய நிகழ்வில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழு அதிகாரி மிட்சுகு கடயாமா தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இதுவரை இந்த விழாவில் பெண்கள் கலந்துகொள்ளக்கூடாது என எந்தத் தடையும் இருந்ததில்லை. இதில் கலந்துகொள்ள பெண்கள் விருப்பம் காட்டவில்லை. இப்போது அவர்கள் கேட்டுக்கொண்டதால் அவர்கள் பங்குபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின் துவக்கத்தில் அரை நிர்வாணமாக இருக்கும் ஆண்கள் சன்னிதானத்தில் ஓடுவார்கள். பின் குளிரும் தண்ணீரில் சுத்தமாவார்கள், அதன் பின்னர் கோயிலுக்குள் செல்கிறார்கள். இந்த விழாவின் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவது, கோயில் அர்ச்சகர் இரண்டு அதிர்ஷ்ட்ட குச்சிகள் கொண்ட 100 கிளை பண்டல்களைத் தூக்கி வீசுவார். அதைக் கண்டுபிடிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணைத் தொடுவதற்காக அனைவரும் போட்டி போடுவார்கள். அது அந்த ஆண்டு முழுக்க அவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.